Sunday, July 6, 2008

மிருகம், மனிதன், மாமனிதன்


புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.


பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?


'மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்' இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.


ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மனிதன்-1

"அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது" என்பது ஆன்றோர் வாக்கு. ஏன் அவ்வாறு கூறுகின்றனர்? மனிதன் ஒருவனால் தான் பிறவற்றைக் கண்டு நலன் உணர்ந்து அவைகளைப் போன்று போலி (Imitate) செய்து வாழ முடிகிறது. இயற்கைகளை மாற்றித் தன் வாழ்வின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. தன்மூலத்தை உணர்ந்து தன்னைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பிற எவருக்கும், எந்த ஒன்றுக்கும் இன்னல் பயவா இன்ப வாழ்வு வாழ முடிகின்றது. இவ்வாறு வாழ்வது தான் மனிதனின் இயற்கை.
எனவே தான், மனிதன் என்ற பெயரைப் பெற்றான். அதாவது எவன் ஒருவன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் மனிதன் என்ற பொருளில் இச்சொல் ஏற்பட்டுள்ளது. மனம் என்ற சொல்லைப் பார்த்தால் அதுவும் இதே பொருளைத் தான் அழுத்தமாக உணர்த்துகின்றது. "மனம்" என்ற சொல் 'மன்" என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. 'மன்' என்றால் நிலையானது. அழியாமை என்று பொருள். ஆனால், நாமோ மனத்தைப் பேயாக, குரங்காக இருப்பதனை உணர்கிறோம்.




ஆனால், அதே மனத்தைத் தவத்தால், தற்சோதனையால், புறத்தே குதிக்காமல் அகத்தே ஆழ்ந்து ஆழ்ந்து தன்னையுணர்கின்ற மெய்யுண்வு தோன்றுகிறது. அப்போது, தானே எல்லாவற்றுள்ளும், எல்லாமும் தன்னுள்ளும் இருப்பது உணரப்படுகின்றது. அந்த நிலையில் மனம் இதமாகிறது. இதனைத்தான் மனிதன் பெற வேண்டும்.


மனம் படைத்த மனிதன் (மன்+இதன்) நிலைபேறான மெய்ப்பொருள் உணர்வு பெற்ற வாழ்வு வாழ வேண்டுமானால் மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தோன்ற வாழ வேண்டும். இத்தகையவர்களைத் தான் வள்ளுவர் செம்பொருள் கண்டவர்கள் என்கிறார். மனத்தைத் தெளிந்து, மனம் நிலைத்து மக்களுக்கும் பிற உயிர் இனங்களுக்கும் மன இதமாய்த் தொண்டாற்றுகின்ற பெருமக்களே நிறை மனிதர்கள்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி